சென்னை அருகே மையம் கொண்டுள்ள ”நிலம்” புயல்..





அக்டோபர் 31: வங்கக் கடலில் மையம் கொண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலம் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் நகர்ந்து வருகிறது.சென்னை நகரில் முன்னெச்சரிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை நகரில் பலத்த காற்று வீசிவருகிறது,
புயல் இப்போது எங்கே இருக்கிறது?
நிலம் புயல் தற்போது நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே கடலில் மையம் கொண்டிருக்கிறது. இது நகர்ந்து சென்னைக்கு மிக அருகே கரையைக் கடக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு புயல் பயணித்த திசையை வைத்து கடலுர்- நெல்லூர் இடையே கரையைக் கடக்கலாம் என்று கூறப்பட்டது.
8-ம் எண் புயல் கூண்டு
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதுடன் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கென எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
மின்சாரம் துண்டிப்பு
நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது,

0 comments:

.