Recent Video

Showing posts with label சமையல் அட்டகாசங்கள். Show all posts

மரவள்ளிக் கிழங்கு வடை


வடைன்னா உளுந்த வடை, பருப்பு வடை தான் ஞாபகத்துக்கு வரும்... இனிமே மரவள்ளிக் கிழங்கு வடையும் ஞாபகத்துக்கு வரும் பாருங்க... அட! ஆமாங்க.. செலவில்லாத அதேநேரத்தில் மிக எளிதாக செய்யக்கூடிய வடை இது... சுவையோ பிரமாதமாக இருக்கும்......
தேவையான பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்தூள் 1 - ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்
செய்முறை:
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.

கறிவேப்பிலை சாதம்










ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு ரொம்ப நல்லது. கறிவேப்பிலையை உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு கருகருவென்று வளரும்... கறிவேப்பிலையை தனியாக சாப்பிட முடியலையென்றால் அடிக்கடி கறிவேப்பிலை சாதம் செஞ்சு சாப்பிடுங்க.... சுவையுடன் நல்ல பலனும் கிடைக்கும்!


தேவையான பொருட்கள்:


சாதம் - 2 கப்
கறிவேப்பிலை - ஒரு கப்
நல்லெண்ணை - 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
வர மிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எலுமிச்சை - 1/4 பழம்
நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


* சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுகலாக வறுத்து, மைய பொடித்துக்கொள்ளவும்.


* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.


* அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.


* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.


* பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.


* பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.


* அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.


* பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.


* பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.


குறிப்பு:


* இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும்.


* முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்.

காலிப்ளவர் பிரியாணி



தேவைப்படும் பொருட்கள் :

பாஸ்மதி - அரைகிலோ
நெய்- 3 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி- முறையே 1,2,3,2
தயிர்- 100 கிராம்
தக்காளி விழுது-200 கிராம்
வெங்காயம்- 2
கொத்தமல்லி- அரை கப்
புதினா- அரை கப்
உப்பு- தேவைக்கு
பிரியாணி தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பச்சைமிளகாய் -2

காலிப்ளவர் பொரிக்க:
காலிப்ளவர்- நார்மலான சைஸில் ஒன்று
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
அஜினோ மோட்டோ- கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுந்து - 2 ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு கைப்பிடி
எண்ணெய்- 100 கிராம்

பாஸ்மதியை தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பாதி வேக்காட்டிலேயே வடித்துவிடவும்.

எண்ணெய் தவிர காலிப்ளவர்க்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.

எண்ணெய் சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும்.

கடாயில் நெய் விட்டு வாசனை பொருட்கள் சேர்த்து பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.

அதில் பிரியாணி தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

தக்காளி விழுந்தையும் தயிரையும் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிய வதக்கவும்.

கொத்தமல்லி, புதினா சேர்த்து பாதியாக வதங்கும் வரை வதக்கவும்.

பொரித்த பூக்களை சேர்த்து 1 நிமிடம் மட்டும் வைத்திருந்து பின் இறக்கவும்.

சாதத்தில் கொட்டி மூடியிட்டு லேசாக குலுக்கி விட்டு 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.

பிரியாணி தயார். ரைத்தா உடன் பரிமாறவும். அசைவ கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

நோன்பு கஞ்சி செய்யும் முறை

ரமழான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது.

மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு/தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக்கஞ்சி இருக்கிறது.


தேவையானவை:
அரிசி – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை – கால் கப்
கொத்து கறி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
மல்லித் தழை – 2 கொத்து
புதினா – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி


செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும். எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.


அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும். பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது.
.