குற்றாலத்தில் குளு,குளு சீசன்: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலத்தில் குளு,குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்வர்.
கடந்த ஆண்டு சீசன் சரியான நேரத்தில் அதாவது ஜுன் 1-ந்தேதி அதிரடியாக துவங்கியது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருமளவு கொட்டியது. ஆனால் இந்தாண்டோ நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 7-ந்தேதி மெயினருவியில் தண்ணீர் விழத்தொடங்கியது. ஒரு வார காலம் மட்டுமே தண்ணீர் விழுந்த நிலையில், அதன் பிறகு குற்றாலம் பகுதியில் சாரல் இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து பெருமளவு குறைந்துவிட்டது.
மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனால் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து ஏலம் எடுத்த வியாபாரிகளும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர்.
சீசன் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு காலம் நிறைவு பெற்ற நிலையில், குற்றாலம் பகுதியில் கடந்த 2 தினங்களாக லேசான சாரல் இருந்து வந்தது. குளு, குளுவென தென்றல் காற்று வீசி வந்தது. வெயிலே தெரியாத அளவிற்கு மேகக்கூட்டங்கள் திரண்டிருந்தது. இதனால் நேற்று ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது.
ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குளு, குளு சீசன் நிலவுவதாலும், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் குற்றால சீசனும் நன்றாக களைகட்டி விடும் என சுற்றுலா பயணிகள் நம்பிக்கையில் உள்ளனர். மேலும் இதே நிலை குற்றாலத்தில் நீடித்தால் இன்னும் சில தினங்களில் புலியருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்டவைகளில் தண்ணீர் விழ தொடங்கிவிடும்
0 comments:
Post a Comment