எந்த இடத்துல ரயில் வருது.. மொபைலிலேயே தெரிந்துகொள்ளலாம்!

ரயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை மொபைலிலேயே தெரிந்து கொள்ள புதிய வசதியை ஐஐடி கான்பூர் உருவாக்கியுள்ளது.
சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டும் என்றாலே டென்ஷன் தான். அதிலும் ரயில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் ரயில் நிலையத்தில் பயணிகளிடத்தில் பெரிய பரபரப்பே ஏற்பட்டுவிடுகின்றது.
இனி மேல் இந்த பரபரப்பு தேவையில்லை என்று சொல்லுவது போல புதிய தொழில் நுட்ப வசதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரயிலின் நம்பரை மொபைலில் டைப் செய்து, 09415139139 அல்லது 09664139139 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தால் போதும், ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை பெற ரயிலில் ஒரு ரிசீவரை பொருத்த வேண்டி இருக்கிறது. ஒரு ரயிலில் இந்த ரிசீவரை பொருத்த ரூ. 50,000 வரை ஆகிறது. இந்த வசதியை கிட்டத்தட்ட ரயில் ட்ராக்கர் என்று கூட சொல்லலாம். இந்த ப்ராஜெக்டிற்கு 121 கோடி செலவளித்திருக்கிறது ரயில்வே துறை.
ரயில் வரும் இடத்தினை கண்டறியும் இந்த புதிய வசதி ராஜதானி, சாதாப்தி, டியூரன்டோ போன்ற அதி வேக ரயில்களில் மட்டும் இப்போதைக்கு வழங்கப்பட இருக்கிறது. இன்னும் 18 மாதத்தில் இந்த ட்ரெயில் ட்ராக்கர் வசதி எல்லா ரயில்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது 2013-ஆம் ஆண்டில் இந்த வசதி அனைத்து ரயில்களிலும் வழங்கப்படும்.ரயில்வே துறை இந்த வசதியினை ரயில்களில் வழங்க இஸ்ரோவிடம் அனுமதியும் வாங்கி உள்ளது.
ரயில் வரும் இடத்தினை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிரோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். சில சமயங்களில் சின்ன சின்ன அவசரங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
சில சமயங்களில் வேறு ஏதேனும் முக்கிய விஷயங்களை, ஒரு ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டு வர வேண்டி இருக்கும். அல்லது ஏதாவது பொருட்கள் ரயில் நிலையத்திற்குள்ளேயே வாங்கி வர வேண்டியது இருக்கும். ஆனால் ரயில் அதற்குள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று காத்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த சவுகரியத்தினை இந்த ட்ரெயின் ட்ராக்கர் வசதியின் மூலம் பெறலாம். ரயில் பயணிகளுக்கு இந்த வசதி முக்கியமான ஒன்று தான்.

0 comments:

.