எடியூரப்பாவுக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் ராஜினாமா
பெங்களூர் : கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் பதவி விலக முடிவு செய்துள்ளனர். இதனால், முதல்வர் பதவியில் இருந்து சதானந்த கவுடாவை நீக்க பாரதிய ஜனதா மேலிடத்துக்கு நெருக்கடி முற்றுகிறது. கர்நாடகாவில் குவாரி, நில மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள எடியூரப்பா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது ஆதரவாளர் சதானந்த கவுடாவை முதல்வராக்கினார். தற்போது, சதானந்தா எதிர்க்கட்சிகளிடம் நெருக்கமாக இருப்பதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினால் அதில் முதல்வரை மாற்ற வேண்டுமென்று 113ல் 60 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி விடலாம் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தெரிந்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தை சதானந்தா கூட்டாமல் இருக்கிறார். ‘மேலிடம் உத்தரவிட்டால் கூட்டம் நடத்தப்படும்’ என்கிறார். இந்த நிலையில், ஜூலைக்குள் முதல்வரை மாற்ற மேலிடத்துக்கு எடியூரப்பா தரப்பு கெடு விதித்தது. கவுடாவை மாற்றினால் 13 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அமைச்சர் ஜாரகிகோலி எச்சரித்துள்ளார்.
இந்த பரபரப்பு தொடர்பாக நேற்று அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் ஆலோசனை நடந்தது. பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தை 48 மணி நேரத்துக்குள் கூட்டாவிட்டால் 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வது என அதில் தீர்மானிக்கப்பட்டது. அது குறித்து சதானந்தாவிடம் கேட்டதற்கு, ‘ராஜினாமா கடிதம் கொடுத்தால் மேலிடத் துக்கு அனுப்பி வைப்பேன். மீதமுள்ள ஓராண்டுக்கும் நானே முதல்வராக நீடிப்பேன்’ என்றார்.
இது குறித்து கவர்னர் பரத்வாஜ் நேற்று தும்கூரில் கூறுகையில், ‘பாரதிய ஜனதாவின் உள்கட்சி பிரச்னைனயில் தலையிட மாட்டேன்.
யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே தலையிட முடியும்‘ என்றார்.
10 அமைச்சர்கள் யார்?
ராஜினாமா செய்ய இருக்கும் அமைச்சர்கள்: ஜெகதீஷ் ஷெட்டர் (ஊரக வளர்ச்சி), ரேணுகாச்சார்யா (கலால்), பசவராஜ் பொம்மை (நீர்ப்பாசனம்), உதாசி (பொதுப்பணி), ஷோபா கரந்தலஜே (மின்சாரம்), சோமண்ணா (வீட்டுவசதி), உமேஷ்கத்தி (வேளாண்மை), முருகேஷ் நிராணி (தொழில்), ரேவுநாயக் பெலமகி (கால்நடை பராமரிப்பு) மற்றும் ராஜுகவுடா (சிறுதொழில்).
0 comments:
Post a Comment