விபத்தை திசைதிருப்ப முயற்சி டிரைவர் மீது பழிபோட்டு நிர்வாகம் தப்பிப்பதா?

விபத்தை திசைதிருப்ப முயற்சி


டிரைவர் மீது பழிபோட்டு நிர்வாகம் தப்பிப்பதா?



சென்னை : பஸ் விபத்து பற்றி முழுமையாக விசாரணை நடத்தாமல், நிர்வாகம் தப்பிக்க டிரைவரை கைது செய்துள்ளதாக கூறி, போக்குவரத்து ஊழியர்கள் நேற்று சென்னை பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் (சிஐடியு) சந்திரன் கூறியதாவது:

தொழில்நுட்ப பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக பணிநியமனம் கிடையாது. இந்த பிரிவில் மட்டுமே தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் அரசு பஸ்கள் அடிக் கடி விபத்து ஏற்படுவதற்கு காரணம். தரமான உதிரி பொருட்கள் வாங்குவதில்லை. இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் நிர்வாகம் டிரைவர் மீது பழிப்போட்டு தப்பிக்கிறது. பஸ் முழுமையான பராமரிப்பு இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்காது. எனவே விபத்துக்கு என்ன காரணம் என்று உரிய விசாரணை குழு அமைத்து ஆய்வு செய்து உண்மையை வெளியிட வேண்டும்.

 விபத்து நடந்ததாக கூறும் வடபழனி மனைகளில் தினந்தோறும் 200 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், வெறும் 5 தொழில்நுட்ப ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். விபத்து நடந்த பஸ்சில் டிரைவர் இருக்கை உடைந்ததும் ஒரு காரணம் என்று கூறுகின்றனர். நேற்றுமுன்தினம் இரவே இந்த பஸ்சின் இருக்கையை புதிய போல்ட் போட்டு சரிசெய்து இருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். தொழில்நுட்ப பணியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை இதற்கான பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

0 comments:

.