செங்கல் சூளையில் இருந்து 34 கொத்தடிமைகள் மீட்பு
கமுதி: கமுதி அருகே செங்கல் காளவாசலில் கொத்தடிமையாக இருந்த 34 பேரை அதிகாரிகள் மீட்டனர். இவர்களை மீட்க சென்ற தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை நள்ளிரவில் சிறைப்பிடித்தனர். இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட் டம் கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் காளவாசல் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எஸ்.மறைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள், வேலை பார்த்து வந்தனர். இவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து அருப்புக்கோட்டை ஆர்டிஓ குணசேகரனுக்கு புகார் வந்தது. இந்த தகவல் விருதுநகர் கலெக்டர் பாலாஜிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் ஆர்டிஓ குணசேகரன், காரியாபட்டி தாசில்தார் சுதந்திரமணி, நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் சில போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு அச்சங்குளத்துக்கு வேனில் சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டுக் கொண்டு செல்ல முடியாதபடி அதிகாரிகளை அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த காளவாசலுக்குள் சென்று வெளியே வர இரண்டு பாதைகள் உள்ளன. இதை ஜேசிபி இயந்திரத்தையும், லாரியையும் நிறுத்தி அடைத்தனர். இதனால் அதிகாரிகளால் வெளியேற முடியவில்லை. அதிகாரிகள் நடத்திய பேச்சில் எந்த பலனும் ஏற்படவில்லை. இது குறித்து பரமக்குடி ஆர்டிஓ மீரா பரமேஸ்வரிக்கும், கமுதி தாசில்தார் காளீஸ்வரனுக்கும் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். மீட்பதற்கு வந்த அவர்களையும் சிறைப்பிடித்தனர். இதையடுத்து அபிராமத்தில் இருந்து ஒரு போலீஸ் படை, காளவாசலுக்கு விரைந்தது. போலீசார் பேச்சு நடத்தி எச்சரித்ததன் பேரில் அதிகாரிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடன் கொத்தடிமை களாக இருந்த 13 குடும்பங்களை சேர்ந்த 14 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உள்பட 34 பேரும் மீட்கப்பட்டனர். தாசில்தார் சுதந்திரமணி கொடுத்த புகாரின் பேரில், அதிகாரிகளை சிறைபிடித்த 20 பேர் மீது அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெள்ளைச்சாமி (35), மலைச்சாமி (44), காந்தி (45), முருகேசன் (40) உள்பட 14 பேரை கைது செய்தனர். நள்ளிரவில் அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கமுதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment