EURO CUP கால்பந்து இறுதி போட்டி: ஸ்பெயின் மற்றும் இத்தாலி இன்று மோத உள்ளனர்.
ஜூலை.1: உலக கோப்பை கால்பந்து போட்டியை அடுத்து மிகவும் பிரசித்து பெற்றது யூரோ கோப்பை கால்பந்து ஆகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப்போட்டி உலக கோப்பையை போலவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைன் நாடுகளில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் வந்துவிட்டது.
16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு உக்ரைனில் உள்ள கீவ் நகரில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின்- இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஸ்பெயின் உலக கால்பந்தில் தற்போது அசைக்க முடியாத நம்பர் 1 அணியாக திகழ்கிறது. அந்த அணி இத்தாலியை வீழ்த்தி புதிய வரலாறு படைக்கும் இலக்கில் உள்ளது.
2008-ம் ஆண்டு ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்தில் நடந்த ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
அதைத்தொடர்ந்து 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில் 1-0 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
யூரோ கோப்பை, உலக கோப்பை ஆகியவற்றை தொடர்ந்து வென்ற அந்த அணி மீண்டும் யூரோ கோப்பையை வென்று சாதனை படைக்கும் முயற்சியில் உள்ளது.
எந்த ஒரு அணியும் தொடர்ந்து 2 முறை ஐரோப்பிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இல்லை. மேலும் ஜெர்மனி அணி அதிகபட்சமாக 3 முறை (1972, 1980, 1996) யூரோ கோப்பையை வென்றுள்ளது. அதனை சமன் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.
ஸ்பெயின் அணி 1964 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் யூரோ கோப்பை வென்றது. இதனால் இன்றைய இறுதிப் போட்டியிலும் இத்தாலியை விழ்த்தினால் புதிய வரலாறு படைக்கலாம் என்ற லட்சியத்தில் ஸ்பெயின் அணி உள்ளது.
ஆனால் ஸ்பெயின் அணியின் அனைத்து வகை சாதனைகளுக்கும் இத்தாலி அணி முட்டுக்கட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்போட்டித் தொடரில் எந்தவித பயமும் இல்லாமல் மிகவும் சிறப்பாக விளையாடும் அணியாக இத்தாலி அணி உள்ளது.
இத்தாலி அணி யூரோ கோப்பையை 2-வது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்கு முன்பு அந்த அணி 1968-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்று இருந்தது. இரு அணியிலும் உலகின் தலை சிறந்த வீரர்கள் இருப்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.
நமது முத்துப்பேட்டை பிபிசி யி்ல் EURO CUP கால்பந்து போட்டி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
0 comments:
Post a Comment